Sunday, February 17, 2013

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா - ச.சங்கர்

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா

எனது நீண்ட நாள் நண்பர் சங்கர் எழுதியதை மீள் பிரசுரிக்கிறேன்.

விஸ்வரூபம் படம் பார்த்தேன் .படம் டெக்னிகலாக நன்றாக எடுக்கப் பட்டிருந்தாலும் அதைத் தவிர யோசித்துச் சிலாகிக்கும் படியோ , திரும்பப் பார்க்கத் தூண்டும் படியோ பெரிதாக ஒன்றும் இல்லை.நிறைய காட்சிகளை மானாவாரியாக எடுத்துத் தள்ளி விட்டு பின் அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒட்ட வைத்து படம் பண்ணியது போலவும் , ” இரண்டாம் பகுதியில் ஒரு வேளை விளக்கம் சொல்லுவார் போல” என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படத்தில் லாஜிகல் சந்தேகங்களும் இருக்கிறது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியதெல்லாம் அபத்தம். முஸ்லிம் பெயரில் எழுதும் தமிழ் பதிவர்கள் நிறைய பேர் அந்த அபத்தத்தை வரிந்து கட்டிக் கொண்டு சப்போர்ட் பண்ணி எழுதுவது அதைவிட அபத்தமாக உள்ளது.முதல்வர் ஜெயலலிதா வருமுன் காப்போன் திட்டம் போல “சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விடாமல் போவதைப் பாதுகாக்கவே இந்தப் படத்தை தடை செய்தேன் “ என்று கூறியது காமடியின் உச்சகட்டம் மட்டுமல்லாது முஸ்லீம்களை சகிப்புத் தன்மை இல்லாத வில்லன்கள் போல சித்தரிக்கும் மாயைக்கு வழி வகுத்து மேலும் இமேஜ் டேமேஜ் செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இத்தனை பரபரப்பிற்கும் பின்னாலும் கூட இந்தப் படம் கமலின் மற்ற இண்டெலக்சுவல் ??? படங்கள் போலவே பெரு நகரங்கள் தவிர மற்ற இடங்களில் ” ஓட்ட “ வேண்டியிருக்கும்” என்பது என் கணிப்பு.


போனவாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்னொரு விவகாரம் “ ஹெலிகாப்டர் ஊழல் “ .டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நான்தான் இதை முதன் முதலில் கண்டு பிடித்தேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டு தினம் தினம் சில ஆவணங்களையும் வெளியிட்டுக் கொண்டு மத்திய அரசாங்கத்தை குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.மந்திரிகள் எம்பிக்கள் உட்பட காங்கிரஸ்காரர்கள் தினம் தினம் வந்து , வழ வழ , கொழ கொழ என பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இருவருமே இப்படி அடித்துக் கொள்ளத் தேவையில்லை.இந்த அரசாங்க ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும் ஊழலை திருத்தவோ சரி செய்யவோ எதுவும் செய்யாது என்பதனை அவர்களுடன் சேர்த்து மக்களும் நன்கு அறிவார்கள்.இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது ? இதில்(ஹிலிகாப்டர் விவகாரத்தில்) என்ன ஊழல் நடந்தது யார் யார் பெயர் அடிபடுகிறது என்றெல்லாம் எழுதப் போவதில்லை.டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இரண்டு நாள் பாருங்கள்..எந்த எபிசோடிலிருந்து பர்த்தாலும் உடனே புரியும் மெகா சீரியல் போல தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்.ஆனால் மெகா சீரியல் போலவே முடிவுதான் இல்லை.


போன வாரம் வந்த இன்னொரு செய்தி சில மாதங்களுக்கு முன் ஹரியானா மானில முன்னாள் மந்திரி கோபால் காண்டா என்பவரது தொடர் மிரட்டலால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படும் கீதிகா என்ற பெண்ணின்( இவர் அந்த மந்திரியால் நடத்தப் பட்டு வந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் ) தாயாரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதுதான். காரணமாக சொல்லப் படுவது அதே முன்னாள் மந்திரி , கீதிகா கேசை வாபஸ் வாங்கச் சொல்லி விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சல்தானாம். அதிகார மற்றும் பணபலமுள்ளவர்களுக்கு முன் கோர்ட் கேஸெல்லாம் ஒன்றும் பண்ணி விட முடியாது என்பதற்கு இந்தக் கேஸும் நல்ல உதாரணம்.கேஸை இழுத்தடித்தே ஒரு வழி பண்ணி விடுவார்கள்.சாமானியர்களின் கேஸ் பொது மக்கள் அல்லது மீடியாவின் பார்வையில் இருந்தால் மட்டுமே ஏதாவது உருப்படியாக நடக்க வாய்ப்புள்ளது டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு போல.இல்லாவிட்டால் அதோ கதிதான்.இந்த கேஸ் பற்றி தொலைக்காட்சியில் ஒலிபரப்பான விவாதத்தில் முன்னாள் போலிஸ் அதிகாரி கிரண் பேடி சொன்னது கவனத்தில் கொள்ளத்தக்கது.நமது குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரது /இழைத்தவரது உரிமை, பாதுகாப்பு பற்றியே பேசுகிறது,குற்றம் இழைக்கப் பட்டவரது அவர் சார்ந்தவரது உரிமை,பாதுகாப்பெல்லாம் பேசப்படுவது குறைவு. அவர் அரசு தரப்பாகி விட்ட படியால் போலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் தயவில் நீதியை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்,அரசு இயந்திரம் எப்படி செயல்படும் என்பது அனைவரும் அறிந்த்தே.இதனால் குற்றம் இழைக்கப்பட்டவர் ஏழையென்றால் அவர் நிலை பரிதாபத்துக்குறியதாகி விடுகிறது.இதனால்தான் பாதிக்கும் மேல் பாதிக்கப் பட்டவர்கள் நீதியே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்கள்.சாட்சி பாதுகாப்பு போன்ற உடனடி சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டால்தான் இந்த நிலை மாறும்.அது வரை ஏழைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு இரக்கப் பட்டு ஐயோ பாவம் என்று சொல்லி விட்டு விட்டு விடாமல் ’ அவ்வப்போது( சென்சேசனலாக இருக்கும் போது மட்டும்) குரல் கொடுக்காமல், நீதி கிடைக்கும் வரை அதை தொடர்ந்து ஃபோகஸில் வைக்க குரல் கொடுப்பது நம் அனைவரது கடமையாகிறது.


அன்புடன்...ச.சங்கர்

Saturday, February 09, 2013

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

பிப் 7ஆம் தேதியன்று தினகரன் நாளிதழில் டோண்டு ராகவன் சார் பற்றிய தலையங்கம் வந்துள்ளது.

இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1. எனது இந்த அஞ்சலி இடுகையில் டோண்டு சாரின் நண்பர்கள் / வாசகர்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர் என்பதைத் தவிர்த்து, நான் அறிந்த வரையில் சுமார் 25 தமிழ் வலைப்பதிவர்கள் டோண்டு சாருக்கு அஞ்சலி இடுகைகளை சமர்ப்பித்துள்ளது, அன்னார் தனது எழுத்துகள், நேர்மை மற்றும் நட்பு பாராட்டும் இயல்பு வாயிலாக எத்தனை பதிவர்கள் / வாசகர்கள் மனதில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அந்த அஞ்சலி இடுகைகளின் தொடுப்புகளை எனது இடுகையின் இறுதியில் அளித்துள்ளேன்.

2. இன்று பொழுது போகாமல், டோண்டு சாரின் வலைப்பதிவில், எனது பெயரை கூகிளியதில்,  60-க்கும் மேற்பட்ட இடுகைகளில் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னை அவர் சுட்டியிருப்பதை  இப்போது தான் முதன் முதலாக கவனிக்கிறேன்.  சிலவற்றை வாசிக்கையில் அவர் என் மேல் வைத்திருந்த அபிமானம் / நட்பு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது !  His death is a great personal loss to me!

எ.அ.பாலா

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார்

டோண்டு ராகவன் சார்

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது! 

எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு --
டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்

பிரபல வலைப்பதிவாளர், அருமை நண்பர் டோண்டு ராகவன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னளவில் இது மிகப் பெரிய இழப்பு! இன்று காலை 11 மணி அளவில் தகனம். 2004-ல் என் வலைப்பதிவை பார்த்து விட்டு, தானும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றவன் என்று சொல்லி என்னுடன் அறிமுகமானார். அப்போது அவர் எனக்கு எழுதிய முதல் மடல் இது !

Triplicane memories and greetings from Dondu 

From narasimhan raghavan

To balaji_ammu@yahoo.com

Dear Balaji,
Yesterday I came to Triplicane. Had a leisurely walk down Pycrofts Road browsing the books in the platform shops. As I passed the Neeli Veerasami Chetty Street cutting, I thought of you but could not make it to your place as I do not know your address. It is also possible that you might have been still at office (5PM). If you have no objection, do email me your residential phone number and address. I will come to your place next time I come that side, if I may.

Do drop in at my place in Nanganallur. (20/B-23, 15th Cross Street, Hindu Colony, Opposite the new Nanganallur bus terminus). You have my telephone numbers already. Your blog about Vegundu was quite good.

Regards, N.Raghavan

என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகியிருக்கிறார். நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவர். அசாத்தியமான மன உறுதி கொண்டவர். சுறுசுறுப்பின் இன்னொரு பெயர் டோண்டு என்று கூட சொல்லலாம். தமிழ் வலையுலகில் அவரது பிரபலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை!  இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் கூட தன் வலைப்பதிவில் ஒரு இடுகையை பதிந்திருக்கிறார்!  8+ ஆண்டுகளில் சுமார்  1000 இடுகைகள் பதிந்திருப்பார் என்பது என் அனுமானம்.

புற்று நோயை எதிர்த்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர். அந்த கடினமான கால கட்டத்தில் கூட இயல்பாக இருக்கவே செய்தார் என்று நான் அறிவேன். இறுதி வரை கடுமையாக உழைத்திருக்கிறார். பல முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். என் குழந்தைகள் அவரது ரசிகைகள்! சமீபத்தில் (அவருக்குப் பிடித்தமானவார்த்தை இது!) மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா அவரை யாரென்று கண்டு கொண்டபோது, சந்தோஷம் அவருக்கு.

அந்த ஒரு முறை தான், நடப்பது கூட பிரயத்தனமாக இருப்பதாகக் கூறினார். அயற்சி என்றே கூறாதவர் அப்படி சொன்னபோது, மனது சங்கடப்பட்டது. எனது வலைப்பதிவு மூலம் செய்து வந்த சமூக உதவிகளுக்கு பெரிய ஊக்கமாக இருந்தவர். டோண்டு போல் ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனிமேல் பார்க்கப் போவதுமில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

தொடர்புடைய அஞ்சலி இடுகைகள்:



டோண்டுவின் மரணம்- தினகரன் தலையங்கம்

அஞ்சலி – டோண்டு ராகவன் - திருமலை ராஜன்

டோண்டு ராகவன் - அஞ்சலி..!  - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்! -ப.வி.ஸ்ரீரங்கன்

டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம் - சின்னக்குட்டி

பாண்டுச் சோழன் சரித்திரம் - பினாத்தல் சுரேஷ்

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !- கோவி கண்ணன்

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். -
சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா
டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி
நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை! - சுவனபிரியன்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

Dondu Raghavan Sir, We miss you!! - பழமை பேசி

அமரர் டோண்டு ராகவன்..

டோண்டு சார் - கானா பிரபா

டோண்டு ராகவன்.- கேபிள் சங்கர்

சென்று வாருங்கள் டோண்டு - செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்!

மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக

  டோண்டு ராகவன் - சந்திரவதனா

டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்-அருண்

பதிவர் டோண்டு மரணம் - பலூன் மாமா

டோண்டு ராகவன் சார்! - உலகநாதன்
டோண்டு - துளசி தளம்

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - உஷா

டோண்டு ராகவன் சார் – அஞ்சலி-பால அனுமான்
டோண்டு ராகவன் மறைவு-பெருங்குளம் ராமகிருஷ்ணன்
டோண்டு! - சரவணகுமார்
டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள் - அருண் பிரபு
டோண்டு ராகவன் – அஞ்சலி - மலர்மன்னன்

 

 

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails